எடப்பாடிக்கு புது தலைவலி.. 2 தலைவர்களையும் சந்திக்க போகிறாராம் ஓபிஎஸ்! நெருங்குகிறதா முடிவு?
சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லிக்கு சுற்றுப்பயணம் செல்ல போவதாக ஒரு செய்தி இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஜி – 20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் கூட்டங்கள் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக திடீர் ஆதரவு
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, மாநில முதலமைச்சர்களுக்கும், பிரதான எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு வந்து சேர்ந்தது. இத்தனை மாதமும், இடைக்கால பொதுச்செயலாளராக பாஜக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை ஏற்று கொள்ளாத நிலையில், “அதிமுக இடைக்கால பொது செயலாளர்” என்று குறிப்பிட்டே அழைப்பிதழ் விடுக்கப்பட்டது.
செங்கோட்டையன் பேட்டி
இது எடப்பாடி தரப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது. அத்துடன், தங்கள் கட்சிக்கான அங்கீகாரமாகவும் இதை கருதி வருகிறார்கள். நேற்றைய தினம், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தந்த பேட்டியிலும், “அதிமுக வலிமையாக இருக்கிறது என்பதற்கு, ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நம்முடைய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பாக அழைக்கப்பட்டுள்ளார்.
இது நமக்கு கிடைத்திருக்கிற பெரிய அங்கீகாரம். ஏன் என்றால், நம்மை மட்டும்தான் அழைத்திருக்கிறார்கள்.. இது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும்” என்று பெருமிதம் தெரிவித்திருந்தார்.

“நம்மை மட்டும் அழைத்திருக்கிறார்கள்” என்று செங்கோட்டையன் குறிப்பிட்டு காட்டியது, அநேகமாக ஓபிஎஸ் தரப்பையே என்று யூகிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற முறைலோ அல்லது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலோ அல்லது தர்மர், ரவீந்திரநாத்குமார் என தன்னுடைய ஆதரவு எம்பிக்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முறையிலோ, ஓபிஎஸ்ஸுக்கும் டெல்லி மேலிடம் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.
ஓபிஎஸ்ஸை கழட்டி விட்ட பாஜக
ஆனால், அவ்வாறான அழைப்பு இல்லை என்பதால், ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் கழட்டிவிட்டுவிட்டதோ என்ற அனுமானங்களும், தமிழக அரசியல் களத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இதற்கு நடுவில், ஓபிஎஸ் ஆதரவாளரான திருப்பூர் செல்வராஜ், திமுகவில் இணைந்ததும் ஓபிஎஸ்ஸுக்கான பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், ஓபிஎஸ செல்வாக்கு சரிந்துவிட்டதாகவும், சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், ஓபிஎஸ் டெல்லி செல்ல போவதாக ஒரு தகவல் வட்டமடித்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்
கடந்த மாதமே அதாவது, பிரதமர் மோடி, அமித்ஷா தமிழகம் வருவதற்கு முன்பேயே, ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்வார் என்றும், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசுவார் என்றும் மூத்த தலைவர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் சொல்லி இருந்தார். ஆனால், ஓபிஎஸ் டெல்லி செல்லவில்லை.
பிரதமர் மோடி, அமித்ஷா தமிழகம் வருகையின் போது, ஓபிஎஸ்ஸை தனியாக சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும், இவர்கள் இருவரையுமே சந்தித்து பேசவுமில்லை, அப்பாயிண்மென்ட்டும் தரவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், டெல்லிக்கு ஓபிஎஸ் சுற்றுப்பயணம் போக உள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வம், அப்படி மேலிட தலைவர்களை நேரில் சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பு அமைந்தால், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவும் பேச வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
வாய்ப்பை தவறவிட்ட ஓபிஎஸ்
கடந்த காலங்களில், எத்தனையோ ஆதரவு சான்ஸ்களை தந்தும், அதில் ஒரு வாய்ப்பையும் ஓபிஎஸ் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றும், அந்த அதிருப்தியினால் ஓபிஎஸ்ஸை, பாஜக கைவிட்டுவிட்டது என்றெல்லாம் சலசலப்புகள் சோஷியல் மீடியாவில் கடந்த 4 நாட்களாகவே வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டெல்லிக்கே ஓபிஎஸ் கிளம்பி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது, எடப்பாடி பழனிசாமி தரப்பினரை டென்ஷன் ஆக செய்துள்ளது.