ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்!!! தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!!!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று(செப்டம்பர்17) நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று(செப்டம்பர்17) தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி மார்க்ரம், மில்லர், மார்கோ ஜான்சென் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்கா அணியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த எய்டன் மார்க்ரம் 93 ரன்கள் சேர்த்தார். டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 63 ரன்களும் மார்கோ ஜான்சென் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 47 ரன்களும் பெக்லுக்வாயோ 19 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணியில் பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளையும், அபாட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் மார்ஷ் தாக்குபிடித்து விளையாடி அரைசதம் அடித்து 71 ரன்கள் சேர்த்தார். மார்னஸ் லபுக்சாக்னே 44 ரன்களும், சீன் அபாட் 23 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் சிறப்பாக பந்துவீசிய மார்கோ ஜான்சென் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேசவன் மஹராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடிய மார்க் ஜான்சென் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் தொடர் நாயகன் விருதை எய்டன் மார்க்ரம் கைப்பற்றினார்.
இந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 123 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் அதாவது மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே போல நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 5வது ஒருநாள் போட்டியில் வெல்வது யார்? தொடரை கைப்பற்றுவது யார் என்பது பற்றி எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. இதனிடைய ஐந்தாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றுள்ளது.