தேர்தல் பிரச்சார செலவுக்கே தன்னிடம் பணம் இல்லாததால், தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் அறிவித்திருப்பது ராகுல்காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசாரித்தா மெஹந்தி தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தற்போது நான் ஒரு செய்தியாளராக பணியாற்றி வருகிறேன். என்னுடைய வருமானம் என்பது குறைவுதான். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறேன்.
தற்போது புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் செலவு செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்காக நான் பொதுமக்களிடம் பணம் திரட்ட எடுத்த அனைத்து அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டது.
என்னை எதிர்த்து போட்டியிடுகின்ற பிஜு ஜனதா தளம், பாஜக வேட்பாளர்கள் பணத்தை தொகுதி முழுவதும் வாரி இறைத்துள்ளனர். ஆனால் எனக்கு கட்சி தரப்பில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு பணம் வழங்க மறுத்து விட்டனர்.
மேலும், ஒடிசா மாநிலத்தின் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியை நிறுத்தி உள்ளது. நிச்சயமாக அந்த தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவும். நிலைமை இப்படி இருக்க நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. விலகிக்கொள்கிறேன் என்று சுசாரித்தா மொஹந்தி தெரிவித்துள்ளார்.
வருகின்ற 25ஆம் தேதி புரி மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசாரித்தா மொஹந்தி விலகி இருப்பது, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், வேட்பு மனுதாக்கல் நாளை மட்டுமே கடைசி நாள் என்பதால், புதிய வேட்பாளர் காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்துவிட, பாஜக வேட்பாளரின் உறுதி வெற்றி உறுதியாகி உள்ளது
ஏற்கனவே குஜராத் மாநில குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.