நாம் உண்ணும் உணவில் எது இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் அறுசுவைகளில் ஒன்றான உப்பு இருந்தால் மட்டுமே உணவு ருசியாக இருக்கும்.கல் உப்பு,தூள் உப்பு என்று இதில் இரு வகை இருக்கிறது.உப்பில் அயோடின்,சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு உப்பு சத்து தேவையான ஒன்று தான் என்றாலும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உயர் இரத்த அழுத்தம்,தைராய்டு,சிறுநீரக பாதிப்பு உண்டாகிவிடும்.
உப்பு மலிவான விலையில் கிடைக்க கூடிய பொருள் என்றாலும் தற்பொழுது இதிலும் கலப்படம் எட்டி பார்க்க ஆரம்பித்துவிட்டது என்றே சொல்லலாம்.தற்பொழுது போலி உப்பின் விற்பனை தான் படு ஜோராக நடந்து வருகிறது.
கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படும் உப்பு கலப்படம் இல்லாதவையாகும்.அதுவே போலி உப்பாக இருந்தால் அதில் வெள்ளை களிமண்,வெள்ளை சுண்ணாம்பு,வாஷிங் சோடா உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்படுகிறது.
இப்படி கலப்படம் செய்யப்பட்ட உப்பை உட்கொண்டால் நம் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடும்.கலப்படம் செய்யப்பட்ட உப்பை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நம் நாடு உப்பு உற்பத்தியில் டாப் இடத்தில் உள்ளது.தென் இந்தியாவில் உப்பு விளைச்சல் அதிகமாக உள்ளது.இருப்பினும் லாப நோக்கத்திற்காக சிலர் உப்பில் கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.கலப்படம் செய்யப்பட்ட உப்பை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.
உப்பு கலப்படம் கண்டறிவது எப்படி?
**முதலில் ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் உப்பு சேர்த்து கலக்கிவிட வேண்டும்.இப்படி செய்யும் பொழுது வெண்மை படலம் தண்ணீரில் தோன்றினால் அது கலப்பட உப்பு என்று அர்த்தம்.
**அதேபோல் ஒரு உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி சதை பகுதி மீது உப்பு தூவிவிட வேண்டும்.இவ்வாறு செய்யும் பொழுது அதன் நிறம் நீலமாக மாறினால் அது கலப்படம் இல்லாத உப்பு என்று அர்த்தம்.அதுவே எந்த நிறமும் மாறவில்லை என்றால் அது கலப்படம் நிறைந்த உப்பு என்று அர்த்தம்.
கலப்பட உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்:
1)தொடர்ந்து கலப்பட உப்பை சாப்பிட்டு வந்தால் தைராய்டு பாதிப்பு ஏற்பட்டுவிடும்.உப்பில் உள்ள அதிக அயோடின் தைராய்டு பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும்.
2)கலப்பட உப்பால் உயர் இரத்த அழுத்தப் பாதிப்பை சந்திக்க நேரிடும்.கலப்படம் செய்யப்பட்ட உப்பை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள்,சுகர்,எலும்பு அரிப்பு,அஜீரணக் கோளாறு,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.எனவே இனி நீங்கள் கடையில் உப்பு வாங்கும் பொழுது அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டியது அவசியம்.