ஒலிம்பிக்: முதல் இடம் பிடித்த 19 வயது இந்திய வீரர்!! பதக்கத்தை நெருங்குகிறார்!!
டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் 2021 போட்டிகளுக்கான தொடக்க விழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இன்று காலை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியின் 16 வது கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவை சேர்ந்த போட்டியாளர்களான சரத் கமல் – மனிகா பத்ரா இணை தோல்வியை தழுவியது. மொத்தம் 27 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் சீனாவை சேர்ந்த தைபே லின் யுன்-ஜூ செங் ஐ-சிங் ஜோடிக்கு எதிராக, இந்தியாவின் சரத் மற்றும் மணிகா ஜோடி 11-8 ,11-6, 11-5 , 11-4 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தனர். .
இதை தொடர்ந்து நடைபெற இருக்கும் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனிகா பத்ரா, இங்கிலாந்து வீராங்கனை உடன் இன்று மதியம் 12.15 மணிக்கு நடைபெறப்போகும் முதல் சுற்றுப்போட்டியில் மோதுகிறார். பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர்ரைபிள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த இளவேனில், அபூர்வி ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர். இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தனிநபர் பிரிவில் தடுமாறினார். அபூர்வி சந்தேலாவும் அவரும் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறினர்.
வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. சிறப்பாக விளையாடிய இந்திய அணியை சேர்ந்த தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர். சீன தைபேவின் லின் ஜியா இன்-டேங் ஜின் ஜன் ஜோடியை வீழ்த்த காலிறுதிப் போட்டிகள் இந்திய நேரப்படி இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியின் தகுதி சுற்றில் 19 வயதே ஆன சவுரப் சவுத்ரி 95, 98, 98, 100, 98 மற்றும் 97 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் இறுதி போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 94, 96, 98, 97, 98 மற்றும் 92 மதிப்பெண்களை பெற்று 17 வது இடத்தைப் பிடித்ததால் தகுதி பெற தவறினார்.