ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் தற்போது வரையில் டெல்டா வகையான வைரஸ் பாதிப்பு தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆரம்பித்து வைத்தார். முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

அதன் பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, நோய்தொற்று உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரையில் டெல்டா வைரஸ் பாதிப்பு தான் இருக்கிறது. பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடும் காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், குடிசை பகுதிகள், பள்ளிகள், உள்ளிட்ட 8 பகுதிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலமாக வைரஸ் உருமாறி இருக்கிறதா என்று கண்டறிய இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து விமான நிலையங்களிலும், போதுமான அளவு பாதுகாப்பும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இதுவரையில் தமிழ்நாட்டிற்கு யாரும் வரவில்லை. சுகாதார ஆய்வாளர்களின் போராட்டம் தேவையில்லாதது, அவர்கள் நோய்தொற்று காலத்தில் பணி புரிந்ததன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் சேர்க்கப்படுவார்கள் என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். மினி கிளினிக் மூலமாக பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பயன் கிடையாது. ஆகவே அங்கு பணியமர்த்தப்பட்ட மருத்துவர்கள் நோய்த்தொற்று பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.