ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம்

Photo of author

By Anand

ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி! சென்னை ஐஐடி மெகா திட்டம்

ஆண்டுக்கு ஒரு லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை உடன் இணைந்து சென்னை ஐஐடி மெகா திட்டம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தை ஐஐடி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

அனைவருக்கும் சென்னை ஐஐடி என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கும் மெகா திட்டத்தை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து , சென்னை ஐஐடி துவக்கி இருக்கிறது . முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த இந்த திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என, ஐஐடி பேராசிரியர்களும், பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்து இருக்கின்றனர்.

ஐஐடி என்றாலே, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பெரும்பாலான மாணவர்கள், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் எண்ணியிருந்த காலம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. குறிப்பாக, சென்னை ஐஐடியின் இயக்குனராக காமகோடி பதவி ஏற்றதற்கு பிறகு, தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை சென்னையை ஐஐடி செயல்படுத்தி வருகிறது . மாநில அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வரும் காமகோடி, அரசு பள்ளி மாணவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஐஐடி இயக்குனரின் திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையும் வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், *அனைவருக்கும் சென்னை ஐஐடி* என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்காக பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. டேட்டா சயின்ஸ் என்ற பாடத்திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் ஆன்லைன் வழியில் படித்து வருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மேலும் அறிவியல் துறை சார்ந்து அரசு பள்ளி மாணவர்கள் புதிய புதிய கண்டுபிடிப்புகளை வீடியோ மேக்கிங் செய்வதற்கான பயிற்சியும் ஐஐடி அளித்து வருகிறது.

இந்த வரிசையில், வரும் காலத்தில் மின்னணு அறிவியல் தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் என்பதால், இந்த துறை குறித்து அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி , உயர்கல்வி வரும் போது அவர்கள் இந்த படிப்பை தேர்வு செய்து படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கக் கூடிய மாணவர்களை தேர்வு செய்து , தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளுக்கு 12 ஆம் வகுப்பு வரை பலவகையான பயிற்சிகளையும், செய்முறையை திட்டங்களையும் மேற்கொள்வதற்கு புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறைவுடன் இணைந்து ஐஐடி துவங்கியுள்ளது. நேற்று மாலை இந்த திட்டத்தை ஐஐடி வளாகத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்தார் . அரசு பள்ளி மாணவர்களுக்கு மின்னணு அறிவியல் தொழில்நுட்ப செய்முறைக்கான கருவிகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை இணைத்து பயிற்சிகளை வழங்கவும், நான்காண்டு பயிற்சிகளை முடிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கவும் ஐஐடி திட்டமிட்டு இருக்கிறது. தமிழக அரசும், ஐஐடியும் இணைந்து மேற்கொள்ளும் இந்த திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்றும், இதனால் அவர்கள் மிகப்பெரும் பயனடைவார்கள் என்றும் ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் ஐஐடி பேராசிரியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.