ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள்! மெரினாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

Photo of author

By Sakthi

முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது இந்த நிலையில் மெரினா கடற்கரையில் அதிமுகவினர் மூன்று பிரிவுகளாக தெரிந்து அமர்க்களப் படுத்தி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

டிசம்பர் மாதம் 5ம் தேதியான நேற்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் மரியாதை செலுத்துவதற்காக காலை 10 .30 மணி அளவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் அதோடு கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் அதில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெள்ளை நிற சட்டையிலும், இபிஎஸ் ஆதரவாளர்கள் கருப்பு நிற சட்டையிலும், வந்திருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

டிடிவி தினகரன் தன்னுடைய அடையாறு வீட்டில் இருந்த 25 கார்களுடன் ராயப்பேட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகத்தை நோக்கி பயணமாக சென்றார். அப்போது சிவாஜி மணி மண்டபத்தை அடுத்த சிக்னலில் திரும்பி இருக்கிறார். அந்த சமயத்தில் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 5 கார்களுடன் பசுமை வழி சாலையில் இருக்கின்ற தன்னுடைய இல்லத்தில் இருந்து வெளியில் வந்து காரை திருப்பியபோது எதிரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடிகளுடன் வந்த கார்கள் சாலையை கடந்தது அந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி சென்ற வாகனமும், அவர் பின்னால் வந்த வாகனமும், சற்று ஓரம் கட்டி நிறுத்தி விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது

ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு வெளியில் வந்த சமயத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களும் சசிகலாவுக்கு காத்திருந்தார்கள் அதிமுகவின் தொண்டர்களும் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் ஜெயக்குமாருக்கு எதிராக கோஷம் இட்டார்கள். வழி விடாமல் தடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும், இபிஎஸ் உடன் வந்த காவல்துறையினரும், கடுமையான முயற்சி செய்து வாகனங்களை நகர்த்தியபோது கூட்டத்திலிருந்து சில காலணிகள் பறந்து வந்தன. இதில் ஒன்று கேபி முனுசாமி காரின் முன்பு கண்ணாடியில் விழுந்தது. அதை ஒருவர் எடுத்து கீழே போட்டார் எடப்பாடி பழனிச்சாமி காரை நோக்கியும் செருப்புகள் பறந்து வந்திருக்கின்றன. கூட்டத்தில் பெரும்பாலானோர் அதிமுக கொடியுடன் இருந்ததன் காரணமாக, கட்சித் தொண்டர்கள் என்று அலட்சியமாக இருந்து விட்டார்கள் அதிமுகவினர் என்றும் சொல்லப்படுகிறது.

சுமார் பதினோரு மணி அளவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தந்தார். அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அதே மேடையில் அதிமுக பேனரை நீக்கிவிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பேனரை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது.

இதன்பிறகு ஒரு சுவாரசியம் நடந்திருக்கிறது, ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக காவல்துறையினர் அதிமுகவினரையும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளையும் அழைத்து தனித்தனியாக உரையாற்றி இருக்கிறார்கள். அப்போது இருவரும் தங்களுடைய சார்பில் வளாகத்திற்குள் தனித்தனியாக மேடை அமைக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால் பொதுப்பணித் துறை சார்பாக தனித்தனி மேடை அமைக்க இடவசதி இல்லை என்று காவல்துறையிடம் மறுப்பு தெரிவித்து இருக்கிறது. இதை இரண்டு தரப்பினரிடமும் தெரிவித்த காவல்துறையினர் ஒரு மேடை தான் அமைக்க இயலும் உங்களுக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள் இல்லையென்றால் மேடை வேண்டாம் என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்கள். இதனை தொடர்ந்து அதிமுகவினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும், பேசி ஒரே மேடையில் அடுத்தடுத்து நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கும் நாங்கள் தான் பணம் கொடுப்போம் என்று அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் பேசி இருவரும் பாதி பணத்தை போடுங்கள் என்று தெரிவித்து அனுப்பி வைத்தார்கள். அதன்படி மேடை அமைக்க அதிமுக 20 ஆயிரம் ரூபாயும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 20 ஆயிரம் ரூபாய் என்றும் பங்களிப்பு கொடுத்தார்கள்.

எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்து ஜெயலலிதாவின் நினைவிடம் செல்லும் வழியில் காமராஜர் சாலையை நோக்கி மேடை அமைக்கப்பட்டது. இதில் முதலில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட உடனேயே உடனடியாக அதிமுகவினர் தங்களுடைய வாக்குறுதியை மதித்து மேடை விரிப்பையும் தங்களுடைய பெயரையும் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. தாங்கள் வைத்திருந்த 14 ஒலிபெருக்கிகளை கட்டி இருக்கிறார்கள் அடுத்த சில நிமிடங்களில் மேடை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தங்களுடைய மேடை விரிப்பை விரித்து புதிய பேனரை மேலே கட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. அதோடு அந்த கட்சியின் கொடிகளும் கட்டப்பட்டன இதே மேடையில் தான் டிடிவி தினகரன் ஏறி உறுதிமொழி எடுத்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு சுமார் 12 மணிக்கு மேல் சசிகலா வருகை தந்தார் அவரை பார்த்த தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியை கையில் வைத்திருந்த ஒரு சிலர் அதிமுகவின் கொடியை தூக்கி பிடித்ததாக சொல்லப்படுகிறது.

சசிகலா அவர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு வரும்போது நினைவிடத்தின் அருகில் அதிமுக அமைப்பு இருந்த மேடையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பேனர் இருப்பதை பார்த்தபடி நடந்து சென்றார். அதிமுக கொடியை விட அமமுக கொடிகள் அதிக அளவில் இருப்பதை பார்த்த சசிகலா கொடியை இறக்கி விட வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படியே எல்லோரும் கொடியை இறக்கி விட்டார்கள்.

ஜெயலலிதாவின் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய உடன் உறுதிமொழி எடுப்பதற்காக அருகில் இருந்த மேடைக்கு போகலாம் என்ற உடன் வேண்டாம் இங்கேயே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம் என்று உறுதிமொழி எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார் சசிகலா.