ஆகஸ்ட் 3 முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் வகுப்புகள்: சாத்தியமா?

0
132

அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்துமாறு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது அனைத்து கல்லூரிகளுக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான். மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளே இல்லாதபொழுது எப்படி சாத்தியமாகும்?

 

தமிழகம் முழுவதும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதலே கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அப்போது, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எந்த பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்படாது என அரசு தடை அறிவித்திருந்தது. இந்த நிலையில், உயர்கல்வித்துறையானது ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல், கல்லூரிகள் ஆன்லைனில் வகுப்புகளைத் தொடங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.

 

ஆனால் இங்கு உள்ள அரசு கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த உரிய ஏற்பாடுகள் எதுவும் இல்லை. வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், ஸ்மார்ட் வகுப்புகள் நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகள் எதுவும் ஏற்படுத்த படாமல் இருப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என பேராசிரியர்களே ஆதங்கப்பட்டு உள்ளனர்.

 

முன்பு உயர்கல்வித்துறையானது, ஆன்லைனில் வகுப்புகள் நடத்த, கல்லூரிகளில் பயிலும் எத்தனை மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதிகள் இருக்கின்றன என பட்டியல் தயாரித்துக் கொடுக்குமாறு ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டிருந்ததாம். அப்போது பேராசிரியர்களே பொங்கலுக்கு எப்படி ஆன்லைனில் பாடம் நடத்துவது என்றும், அதற்கான அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் வேண்டுமென்றே ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களின் பட்டியல்கள் குறைவாகவே இருப்பதாக அறிக்கை தயார் செய்து கொடுத்துள்ளனர். அந்த அறிக்கையின்படி, அரசு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தும் திட்டத்தைக் கைவிட்டு விடும் என நினைத்தபோது, இப்போது அரசு ஆன்லைனில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

இதுகுறித்து அரசு பேராசிரியர் ஒருவர் அளித்த விளக்கம், தனியார் கல்லூரிகளில் அவர்களுக்குச் சொந்தமாக யூட்யூப் செயலியை வைத்துள்ளனர். அந்த செயலியில் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து, 5 மணி நேரம் எடுக்கும் வகுப்பினை வீடியோ பதிவில் தயார்செய்து ஐநூறு எம்பி டேட்டாவில் மாணவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.

 

மேலும், அவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் எடுக்க வசதிகள் உள்ளதாகவும், அவர்களே அந்த வசதியை பயன்படுத்தி ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்து விடுவார்கள்.

 

ஆனால் இப்படிப்பட்ட எந்த வசதியும் அரசு கல்லூரிகளில் இல்லை, ஆகையால்தான் ஒரு மண்டலத்தில் இருக்கும் கல்லூரியின் முதன்மையாகக் கொண்டு அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சேர்த்து ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

 

மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு நிதியாக ‘ரூஸா பண்ட்’ எனும் பெயரில் 2013-ம் ஆண்டிலிருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளில் உள்ள கல்லூரிகளுக்கு 2 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இதனை முறையாகப் பயன்படுத்தி இருந்தாலே இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், அடிப்படையான தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றிருக்க முடியும். ஆனால் பெரும்பாலான அரசு கல்லூரிகளில் ரூஸா பண்டினைக் கொண்டு, கணினிகள், ஜெராக்ஸ் மிஷின்கள், பிரிண்டர்கள், இன்வெர்ட்டர்களையுமே வாங்கிக் குவிக்கிறார்கள். இவைகள் அனைத்தும் குறைந்த காலத்திற்கே பலனளிக்கும். பிறகு, இவை அனைத்தும் கல்லூரி குப்பை குடோன்களில் தான் குவிந்துகிடக்கும்.

 

 

அரசுக் கல்லூரிகளில் 15 பாடப்பிரிவுகள் (டிபார்ட்மெண்ட்ஸ்) வரை உள்ளன. அதில் ஒவ்வொரு பட பிரிவிற்கும் இரண்டு அல்லது மூன்று லட்சம் வரை ரூஸா பண்டிலிருந்து கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் கொடுத்தது போக மீதி உள்ளதை மேல் மட்டத்தில் உள்ளவர்கள் அடித்து விடுகிறார்கள்.

 

மேலும் இதனை கொண்டு கழிவறை கட்டுவதற்கும், ஓய்வுறும் இடம் கட்டுவது போன்ற கட்டுமான செலவுகளில் கணக்குக் காட்டி அதிலும் கமிஷன் அடிக்கிறார்கள்.

 

இந்த ரூவா நிதியினை ஒவ்வொரு வருடமும் முறையாகப் பயன்படுத்தி இருந்தாலே அந்தந்தப் பாடப்பிரிவுகளில் இதுபோன்ற ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளை உருவாக்கியிருக்க முடியும். ஆனால் அப்படிப்பட்ட தொலைநோக்குப் பார்வை எதுவும் இல்லாத காரணத்தால் இப்போது ஆன்லைன் கிளாஸ் என்பதால் பேராசிரியர்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்” என அவர் கூறினார்.

Previous articleகொரோனா ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்
Next articleபுலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் என்ன செய்தீர்கள்: மாநில அரசுகளை கடுமையாகச் சாடும் உச்சநீதிமன்றம்!