ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களுக்கு வரும் OTP! தொலைபேசி எண் தெரியாது! சென்னை இளைஞர்கள் உருவாக்கிய செயலி!

Photo of author

By Kowsalya

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக எடுக்கப்படும் வகுப்புகளில் ஏராளமான அத்துமீறல்களை சந்திக்கும் மாணவிகள் என்று பல்வேறு பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர்கள் மீது ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்ஸில் என்ற செயலி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளின் போது சில ஆசிரியர்கள் நடந்துகொள்ளும் கேவலமான அத்துமீறல்கள் பற்றி பல்வேறு புகார்கள் சமீபத்தில் எழுந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் சென்னையை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆன்லைன் வகுப்பை கண்காணிக்க நெறிமுறை படுத்த கென்சில் என்ற ஒரு செயலியை உருவாக்கி உள்ளனர்.

அனைத்து ஆன்லைன் வகுப்புகளும் பதிவு செய்யப்படவேண்டும் என்று சமீபத்தில் அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த செயலி அதற்கு ஒரு ஆதாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த செயலி நம் இந்திய கல்வி முறையை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. வீட்டுப்பாடத்தை பதிவேற்றும் வசதி, அட்டவணை ,ஆன்லைனில் தேர்வுகள் எழுதும் வசதி, ஆன்லைனிலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, மாணவர்களின் கற்றல் திறனை அதிலேயே மதிப்பிடுவது, பள்ளி கட்டணம் செலுத்துவது என அனைத்து செயல்பாடுகளையும் இந்த செயலி கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி நடக்கப்போகும் அனைத்து ஆன்லைன் வகுப்புகளையும் வீடியோ பதிவுசெய்யப்பட்டு சர்வர் கிளவுடில் ஏற்றப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய அம்சமாக எப்பொழுது ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறதோஅதற்கு முன் பெற்றோருக்கு சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து otp வரும். அந்த otp- யை மாணவர்கள் பதிவு செய்தால்தான் மாணவர்களால் வகுப்பில் இணைய முடியும். மேலும் மாணவர்களின் தொலைபேசி எண்ணோ, ஆசிரியர்களின் தொலைபேசி எண்ணோ யாருடைய தொலைபேசி எண்ணும் யாருக்கும் தெரிய வராது என்பதுதான் இந்த செயலியின் மிகச்சிறந்த சிறப்பம்சம்.

8 பேர் கொண்ட குழு இந்த செயலியை உருவாக்கி உள்ளனர். இந்த செயலி சென்னை மற்றும் வேலூரில் உள்ள 35 பள்ளிகள் பயன்படுத்தி வருகின்றன. சில புதிய அப்டேட்களை கொண்டு அரசுப் பள்ளிக்கும் இந்த செயலியை கொண்டு சேர்க்க இந்த குழு திட்டமிட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.