ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்!! முதல்வர் உருக்கம்!!
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல உயிர்கள் பலியாகி உள்ளன. இந்த விளையாட்டினை தடை செய்வதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அடுத்த வந்து திமுக ஆட்சியின் போது ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டும், ரம்மி விளையாட்டை தடை செய்ய முடியாததால், சட்டமன்ற கூட்ட தொடரில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன் மசோதா தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநருக்கு அனுப்பிய மசோதாவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி 131 நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி, இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவிற்கு ஆளுநர் கையெழுத்து போட மறுப்பது ஏன் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சரமாரியான கேள்வி கனைகளை கேட்டு, போராட்டம் மற்றும் கோரிக்கை மனுக்களை அனுப்பினர்.
ஒரு கட்டத்தில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்நிலையில் திமுகவின் பேச்சாளர்கள் மற்றும் இதர கட்சியினர் ஆளுநரை வசைபாட தொடங்கினர்.
இந்த சம்பவங்களால் ஆளுநருக்கும், ஆளும் தரப்பிற்க்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவில் என்னென்ன கேள்விகள் கேட்டிருந்தாரோ அதற்கு தகுந்த பதில் அளிக்கப்பட்டு, தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் தமிழக சட்டமன்ற கூட்ட தொடரில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் அணைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு இன்று மீண்டும் அனுப்பப்பட்டது.
இதனிடையே சட்டமன்றத்தில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுநாள் வரை 41 உயிர்கள் பலியாகி உள்ளது மிகவும் வேதனை அளிப்பதாகவும், இந்த விளையாட்டினை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்வதற்கு, பல்வேறு தரப்பினரிடையே கருத்துக்கள் கேட்க்கப்பட்டு அதன் மூலம் சட்டமன்றத்தில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கையும், மக்களையும் காக்கின்ற முழுப் பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது என்றும், இனி தமிழகத்தில் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஒரு உயிர் கூட பலியாக கூடாது, ஆளுநர் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த மசோதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மக்களின் இதய பூர்வமான முடிவினை ஆளுநர் ஏற்றுகொள்ள வேண்டும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பலியான உயிர்களை நினைத்து கனத்த இதயத்துடன் நிற்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.