ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்; இரட்டை இலை சின்னத்திற்கு பிரசாரம் செய்வோம் – ஓபிஎஸ் தரப்பு அந்தர் பல்டி!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் குமார் வாபஸ் பெற்றுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதேசமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்று ஓபிஎஸ் அறிவித்தார்.அதன்பின்னர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால், அதிமுக வேட்பாளர் யார்? என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக தென்னரசை அறிவித்து ஒப்புதல் படிவத்தை வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
இந்த ஒப்புதல் படிவம் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த வேட்பாளரை பெரும்பாலான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரித்து கடிதம் அனுப்பினர். இதனை தொடர்ந்து அந்த கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டெல்லி சென்றுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணான வகையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்றுள்ளது எனவும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய படிவத்தில் வேட்பாளராக தென்னரசின் பெயர் மட்டுமே உள்ளது செந்தில் முருகன் பெயர் இடம்பெறவில்லை எனவும் ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இந்த சூழலில் தற்போது ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ் பெற்றுள்ளார். இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடாது என்பதற்காக வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என தெரிவித்தார். மேலும் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் எனவும் அவர் கூறினார்.