ஓபிஎஸ்ஸின் அடுத்த நகர்வு பாஜகவா? சசிகலா கூட்டணியா?
அதிமுகவில் பலம் வாய்ந்த பதவியான பொது செயலாளர் பதவியை பற்றி கொள்வதில் எடப்பாடி பழனிசாமி மும்முரமாக இருந்தாலும், ஓபிஎஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டிருந்தார். ஒரு வழியாக அந்த முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்த எடப்பாடி பழனிசாமி தான் நினைத்ததை சாதித்து காட்டினார். அந்த வகையில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஓபிஎஸ்க்கு தோல்வியை மட்டுமே தந்தது.
எடப்பாடியின் இந்த விஸ்வரூப வெற்றிக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் தரப்போ வழக்கம் போல நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. ஒருவேளை இதிலும் அவர் தோற்று விட்டால் அவரின் அரசியல் நிலைமை என்னவாகும் என அனைவராலும் உற்று பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே சசிகலாவை சந்திப்பேன் என அவர் கூறி வரும் நிலையில் அவருடன் செல்வாரா அல்லது பாஜகவிற்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உண்டாகியுள்ளது.
அதே நேரத்தில் இவரை வைத்து அதிமுக இல்லாமல் மூன்றாவது அணியை உருவாக்கி, தென் மாவட்டங்களில் அதிகப்படியான சீட்டுகளை ஒதுக்கி ஓபிஎஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது சாத்தியமில்லை அவர் பாஜகவில் இணைந்து விட்டால் தங்களின் வளர்ச்சி தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் என பாஜக தரப்பு நம்புவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2017 இல் எடப்பாடி மற்றும் பன்னீரை இணைத்து வைத்தது போல மீண்டும் ஒரு வாய்ப்பு தற்போது இல்லை என்றே கூறப்படுகிறது. அதனால் பாஜகவில் சேர்த்து கொண்டு அவருக்கு மத்திய அமைச்சர் அல்லது கவர்னர் பதவி தரலாம் எனவும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
ஆனால் அதற்கெல்லாம் தற்போது வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மத்தியில் பிஜேபி ஆட்சி முடிவதற்கு இன்னும் ஒரு வருட காலமே உள்ளதால் ஓபிஎஸ்க்கு அங்கு வாய்ப்பு என்பது மீண்டும் கானல் நீர் போல ஆகிவிடுமோ என்றும் அவரது ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாக அவரது சொந்த சமூகமான சசிகலாவுடன் இணைந்து புதிய கட்சி தொடங்குவாரோ எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.