இபிஎஸ்க்கு எதிராக கைக்கொர்க்கும் ஓபிஎஸ் சசிகலா?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வமும், சசிகலாவும், ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவின் பொது செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

அதாவது தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்தாலும் நான் தான் பொதுச்செயலாளர் என்று தற்போதும் அவர் தெரிவித்து வருகிறார்.

அதேபோல பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். அவரை இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாக பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழுவில் அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார்.

இந்த நிலையில், பழனிச்சாமிக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அதோடு தினகரன் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயல்பட திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதனை உறுதி செய்யும் விதத்தில் அண்மையில் பன்னீர்செல்வம் ஆதரவாளரான செல்வராஜ் வழங்கிய பேட்டியில் சசிகலா அதிமுகவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. அவருக்கு பதவி வழங்குவது தொடர்பாக கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

அதேபோல ஒரு சில நாட்களுக்கு முன்னர் தேனி மாவட்டம் பகுதிக்குச் சென்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரனுக்கு பன்னீரின் ஆதரவாளர்கள் வரவேற்பு வழங்கியதாக சொல்லப்படுகிறது.

முக்குலத்தோர் சமுதாய அமைப்பைச் சார்ந்தவர்களும் அரசியலில் மறுபடியும் எழுச்சி பெற சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன், உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

தினகரன் தனிக்கட்சி நடத்தி வருவதால் சசிகலா மற்றும் பன்னீர் செல்வத்துடன் ஒன்றிணைந்து செயல்பட தயக்கம் காட்டி வருவதாகவும், சொல்லப்படுகிறது.

ஆனாலும் பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாக செயல்பட சசிகலா இசைவு தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்பட்ட தென் மாவட்ட சட்டசபை உறுப்பினர்களில் ஒரு சிலரை இழுக்கும் முயற்சியை துவங்கியிருக்கிறார்.

இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருகிறது. அதே சமயம் சசிகலாவுடன் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பன்னீர்செல்வம் தரப்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment