ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல்

Photo of author

By Parthipan K

ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி திட்டம்! இபிஎஸ்க்கு வரும் புதிய சிக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் 106 பேர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருககின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்ஸுக்கும் இபிஎஸ்க்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது இபிஎஸ் தரப்பில் தென்னரசு, ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றார். அதன் பிறகு இரட்டை இலை சின்னம் வெற்றி பெறுவதற்காக உழைப்போம் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வந்தனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓபிஎஸ்ஸை பிரச்சாரத்திற்கு அழைக்காமல் கூட்டணி கட்சியினரை வைத்து இபிஎஸ் தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் உதவியே இல்லாமல் தனது பலத்தை காட்ட வேண்டும் என இபிஎஸ் விரும்புகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ்ஸின் பலத்தை காட்ட திருச்சி அல்லது மதுரையில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூட உச்சரிக்க விரும்பவில்லை என ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதன்பிறகு ஓ.பி.எஸ் அணி ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் 106 பேர் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.மேலும் இதற்கான கடிதத்தை அவர்கள் ஓபிஎஸ்க்கு அனுப்பியுள்ளனர். கட்சிக்கு தொடர்பில்லா நபரை வேட்பாளராக அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அவரை திரும்ப பெற்றதால் அதிருப்தி அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு பல பின்னடைவுகள் ஏற்படுவதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதனையடுத்து ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.