தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வீடியோ பதிவுடன் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தற்போது நடந்து முடிந்த இருக்கக் கூடிய சூழ்நிலைகள் பல பகுதிகளில் மறைமுக தேர்தல் நடத்தப்படவில்லை இந்த சூழ்நிலையில், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் உள்ளிட்டவற்றில் பங்குபெறும் வார்டு உறுப்பினர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தேர்தல் நடைமுறைகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், வார்டு உறுப்பினர் எஸ் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதேபோல மாமனந்தல் கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தல் நடைபெற உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தும், வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நேற்றைய தினம் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அந்த சமயத்தில் மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிவசண்முகம், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நவம்பர் மாதம் 22ஆம் தேதியும் மாமனந்தல் கிராம ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக தொடர்ந்த வழக்கில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மறைமுக தேர்தல் நடத்தப்பட வேண்டிய இடங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியுள்ள உறுப்பினர்கள் மறைமுக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் எந்தவிதமான தடையும் இல்லாமல் எளிதாக செல்வதை மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும், உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்கள்.

அதேபோல மறைமுக தேர்தலையும், தேர்தல் நடைபெறும் வளாகங்களில் நடைபெறும் நடவடிக்கைகளையும், வீடியோ பதிவு செய்து அதனை 60 தினங்கள் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டனர் நீதிபதிகள்.