தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர் ராஜன் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பேமஸ் ஆன டைலாக் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது தான். நோட்டாவை விட கம்மியாக ஓட்டும் வாங்கும் கட்சி என்பதை மாற்ற வேண்டுமென பாஜக தலைமை பெரும்பாடுபட்டு வருகிறது.அதற்காக இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று சிலரையாவது சட்டமன்றத்திற்குள் அனுப்பிவிட வேண்டும் என முயற்சி செய்து வருகின்றனர்.
அதற்காக தனது கட்சி போட்டியிடும் 20 இடங்களிலும் பார்த்து பார்த்து வேட்பாளர்களை களமிறங்கியுள்ளது. ஆயிரம் விளக்கில் குஷ்பு, திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சரவணனுக்கு மதுரை வடக்கு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி, பாஜக தமிழக தலைவர் எல். முருகனுக்கு தாராபுரம் தனித்தொகுதி, வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்கு, காரைக்குடியில் எச்.ராஜா என வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பாஜக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் மோடி மற்றும் அமித் ஷாவின் புகைப்படங்கள் இல்லாதது தமிழக பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரதமரை புகழ்ந்து தள்ளும் குஷ்பு கூடஆயிரம் விளக்கில் மலரும் தாமரை என்ற வாசகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும், தனது புகைப்படத்தையும் மட்டுமே ட்விட்டரில் முகப்புப் படமாக வைத்திருக்கிறார். அந்த முகப்புப்படத்தில் பிரதமர் மோடி, அமித் ஷாவின் புகைப்படங்கள் இடம்பெறாதது விமர்சனங்களை உருவாக்கி வருகிறது.
குஷ்பு இப்படி நீங்களே நேரடியாக பிரதமரை கலாய்த்தால் நாங்கள் என்ன செய்வது, சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்ற சொல்லப்பட்டவரை முகப்பு பக்கத்தில் வைத்துள்ள நீங்கள், பிரதமர் மோடி படத்தை வைக்க தயங்குவது ஏன் என கேள்விகள் குவிந்து வருகிறது.
அதேபோல் பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடும் தொகுதியிலும் சுவர் விளம்பரங்களில் அமித் ஷா, மோடியின் பெயர்கள் காணாமல் போயுள்ளன. எம்.ஜி.ஆர்., அம்மா அவர்கள் நல்லாசி பெற்ற வேட்பாளர் எல்.முருகன் என்றே வாசங்கள் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலை முன்னிட்டு திடீரென காணாமல் போன மோடியின் புகைப்படங்கள், பெயர் இல்லாத துண்டறிக்கைகள் தலைமை வரை கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. மோடி, அமித் ஷா பெயரை சொன்னாலே தமிழகத்தில் ஓட்டு கிடைக்காது என இவர்கள் பயப்படுவது சோசியல் மீடியாக்களில் மீம்ஸ்களாக மாறிவருகிறது. இதைப் பார்க்கும் பாஜகவினரே சொந்தக்கட்சியினரே இப்படியெல்லாம் செய்தால் தமிழகத்தில் தாமரை மலருமா? என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.