அண்ணாமலையின் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தம்!
தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மதுரை,திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை நிறுத்தி வைத்துவிட்டு டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
கடந்த மாதம் ஜூலை-28 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடை பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.இந்த தொடக்க விழாவில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.மேலும் அதிமுக சார்பில் ஆர்.பி.உதயகுமார் இவ்விழாவில் பங்கேற்றார்.
இதையடுத்து நடை பயணத்தின் நடுவில் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வரும் அண்ணாமலை அவர்கள் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வந்தார்.மேலும் நாங்கள் ஓ.பன்னீர் செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை.அனைவரையும் அரவணைத்து செல்கிறோம் என்றும் பேசியிருந்தார்.இந்நிலையில் பன்னீர் செல்வம் குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவரை கடுமையாக சாடினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தொடர்ந்து பாஜக தரப்பினரும் அதிமுகவை விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் அதிமுக-பாஜகவினர் இடையே வார்தைப்போர் உக்கிரமடைந்துள்ளதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் அண்ணாமலையின் பாதயாத்திரை பயணம் தொடங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் பாதியிலேயே நிறுத்தி விட்டு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா விடுத்த அழைப்பின் பெயரில் இன்று மதியம் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.மேலும் தமிழக அதிமுக-பாஜக கூட்டணியில் வார்த்தைப்போர் நிலவி வருவது குறித்து ஜெ.பி.நட்டா உடனான சந்திப்பின் பொழுது அவர் விரிவான ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்க அதிமுக விருப்பம் தெரிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் அக்கூட்டணிக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.