மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது எப்போது வழங்குகிறார்கள் தெரியுமா??
தேமுதிக நிறுவன தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மத்திய அரசு சார்பாக பத்மபூசன் விருது அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்திற்கு விருது வழங்கப்படவில்லை.
முன்னதாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேமுதிக பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக உடன் கூட்டணி அமைத்ததால் தான் விஜயகாந்திற்கு விருது வழங்கப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக நடைபெறும் விருது விழாவில் விஜயகாந்திற்கு விருது வழங்கப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில் தற்போது விஜயகாந்திற்கு விருது வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பிரேமலதாவை தொடர்பு கொண்டு பேசியதாக அவரே கூறியுள்ளார். அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடை வெயில் காரணமாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்குவது தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து ஏதாவது தகவல் வந்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேமலதா, “வரும் மே 9 ஆம் தேதி மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.
இதற்கான அழைப்பு நேற்று தான் எங்களுக்கு வந்துத. இந்த விருது விழாவில் நானும் விஜயபிரபாகரனும் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல உள்ளோம்” என கூறியுள்ளார். முன்னதாக விஜகாந்திற்கு விருது வழங்காமல் தவிர்த்த காரணத்தால் எங்கே இந்த விருதை தராமலே போய்விடுவார்களோ என ரசிகர்கள் பலரும் பயந்தனர். ஆனால் தற்போது விருதை அறிவித்திருப்பதால் நிம்மதி அடைந்துள்ளனர்.