எல்லோரும் எதிர்பார்த்தபடி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது அதிமுக. நேற்று இரவு சென்னை வந்த அமித்ஷா சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இன்று காலை முதல் அதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பின் அதே ஹோட்டலில் 5 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமித்ஷாவுடன் பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தார்கள். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா ‘2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் இந்திய ஜனநாயக கூட்டணி இணைந்து தமிழகத்தில் போட்டியிடும். தேசிய அளவில் மோடி தலைமையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் தேர்தலை நாங்கள் சந்திக்கவுள்ளோம்.
எங்கள் கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். ஏனெனில், ஜெயலலிதா காலம் முதலே அதிமுகவுடன் பாஜக இனைந்து பயணித்து வருகிறது’ என கூறினார். அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினர் அமைச்சர் ஆவாரா என்பதை பிறகு சொல்கிறோம். அதிமுக தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கூட்டணியை ஏற்பது அதிமுகவின் முடிவு. அதில் நாங்கள் தலையிட மாட்டோம். அதிமுகவின் தனிப்பட்ட விஷயங்களில் பாஜக தலையிடாது. தேர்தல் விவகாரங்களில் மட்டுமே பங்கேற்போம். யார் யாருக்கு எத்தனை தொகுதி ஆட்சி அமைப்பது யார் என்பது பற்றியெல்லாம் பின்னர் முடிவு செய்வோம். இந்த கூட்டணியால் அதிமுக – பாஜக இருவருக்குமே பலன் கிடைக்கும்’ என சொல்லி இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது முதலே அதிமுகவுடன் பாஜக இணைகிறது என செய்திகள் அடிபட்டு வந்தது. தற்போது அது உறுதியாகிவிட்டது. இந்த கூட்டணி இணைய அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என அமித்ஷா சொன்னதில் உண்மையில்லை என்கிறார்கள் சிலர். ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டேன். இது உங்களுக்கு சம்மதம் எனில் கூட்டணி’ என அமித்ஷாவிடம் பழனிச்சாமி உறுதியாக சொல்லிவிட்டாராம். இதை அமித்ஷாவும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் செய்தியாளர்களிடம் ‘அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை’ என சொல்லி அமித்ஷா கடந்துபோய் விட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
கடந்ந்த சில நாட்களாகவே செங்கோட்டையன் மூலம் பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகிய எல்லோரையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவாக மாற்றி அதோடு கூட்டணி அமைக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டிருந்தார். ஆனால், பழனிச்சாமி கறாராக இருந்ததால் அது கடைசி நடக்கவில்லை.