திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சித்தலைவராக அமிர்தம் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த சுதந்திர தினத்தன்று ஆத்துப்பக்கம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்ற அந்தப் பள்ளி தலைமையாசிரியர் அழைப்பு விடுத்திருந்தார். பிறகு சிறிது நேரத்தில் தேசியக்கொடி ஏற்ற வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் சாதிய பாகுபாடு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். இந்த செய்தி ஊடகங்களிலும், பத்திரிக்கை நாளிதழ்களிலும் செய்தி வெளியானது.

இதனை அடுத்து செய்திகளின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதில், “சாதி பாகுபாடு காரணமாக கொடியேற்றம் செய்ய புறக்கணிக்கப்பட்டது மனித உரிமை மீறலாகும்.
இதுதொடர்பாக ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவர் அமிர்தம் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சாதிய பாகுபாடு தவிர்ப்பது குறித்து என்ன நடவடிக்கை இதுவரை எடுத்துள்ளது?
இதுகுறித்த தகவல் அறிக்கையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இரண்டு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.