9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்! மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

Photo of author

By Sakthi

சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தலை எந்த தேர்தலாக இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், கூட பிரச்சாரங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றுதான். இது இந்தியா முழுவதும் காலம் காலமாக நடைபெற்று வருவது தான்.

ஆனால் தற்சமயம் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்கள் இடையேயும் பொது மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் அடிப்படையில், வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது.

இதற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மற்றும் நிர்வாகிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் அரசியல் தலைவர்களை தவிர்த்து அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த ஒரு கட்சியை சார்ந்தும், எந்த கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்ற விதிமுறை கால காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான் ஆனாலும் ஒரு சிலர் இந்த விதிமுறையை மீறி செயல்பட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதாவது திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 6 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 4 பதவிகளுக்கு சுமார் 6307 வேட்பாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள்.

இப்படியான சூழலில் ஜோலார்பேட்டை ஒன்றியம் சோம நாயக்கன் பட்டி ஊராட்சி செயலாளராக சுந்தரமூர்த்தி பணிபுரிந்து வருகின்றார். இவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நேற்றையதினம் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் வழங்கினார்.

இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஊராட்சி செயலாளர் சுந்தரமூர்த்தி அவர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதோடு அரசு ஊழியர்கள் எந்த ஒரு காரணத்தை முன்வைத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.