பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்!

Photo of author

By Parthipan K

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது! இந்தியாவில் இருந்து 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்!

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.சமீபத்தில் நடந்து முடிந்த 32வது ஒலிம்பிக் போட்டிகளில் 205 நாடுகளும் நாடுகள் இல்லாத அகதிகள் அணியும் பங்கேற்றன.இந்த போட்டிகளில் சீனா முதலிடத்தைப் பெற்றது.சீன அணி 23 தங்கம் 14 வெள்ளி 13 வெண்கலம் வென்று முதலிடத்தைப் பெற்றது.இரண்டாவது இடத்தை அமெரிக்காவும் மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்தன.

இந்த போட்டிகளில் 33 விளையாட்டுக்கள் 50 பிரிவுகளின் கீழ் நடைபெற்றன.மொத்தம் 339 நிகழ்வுகள் இதில் நடைபெற்றன.மேலும் பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பதக்கங்களைக் கைப்பற்றினர்.இதனையடுத்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் நடக்கும்.இந்த வருடத்திற்கான பாராலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த போட்டிகளில் மொத்தம் 160 நாடுகள் பங்கேற்கின்றன.மேலும் 4400 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.இந்திய நாட்டின் சார்பாக 54 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.இதுவே இதுவரை நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அதிகபட்ச வீரர்களின் எண்ணிக்கை ஆகும்.இந்திய வீரர்,வீராங்கனைகள் தடகளம்,வில்வித்தை,பாட்மிண்டன்,டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான விளையாட்டுகளில் களம் காண்கின்றனர்.தொடக்க விழா அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்தியா பங்கேற்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளைப் போன்றே பாராலிம்பிக் போட்டிகளிலும் பார்வையாளர்களை ஜப்பான் நாடு அனுமதிக்கவில்லை.மேலும் பாராலிம்பிக் போட்டிகளில் தொடர்புடையவர்கள் 131 நபர்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இருப்பினும் பள்ளி மாணவர்கள் பத்தாயிரம் பேரை பாராலிம்பிக் போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதிக்கப் போவதாக டோக்கியோ மாநிலத்தின் கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளார்.இந்தியா சார்பில் பதக்கங்கள் இந்த முறை ஓரளவு அதிகமாக இருக்கலாம் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.