தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளியின் கழிவறையை அகற்ற கோரி பெற்றோர்கள் போராட்டம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலநம்பிபுரம் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது துவங்கப்பட்டு சுமார் 80 ஆண்டுகள் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் பயின்று வந்து நிலையில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 50 மாணவர்களுக்கு மட்டுமே பயின்று வருகின்றனர்.
மேலும் இந்நிலையில் அந்தப் பள்ளியில் ஆபத்தான நிலையில் பாழடைந்த கழிவறை உள்ளது அந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று சமீபத்தில் அதற்கான புதிய கட்டிடம் அரசால் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டிய நிலையில் ஆபத்தான நிலையில் உள்ள அந்த பழைய கழிவறை கட்டிடத்தை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் பெற்றோரின் கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டுகொள்ளாத காரணத்தால் பெற்றோர்கள் கோபமடைந்து குழந்தைகளின் டிசியை தருமாறும் அவர்களை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம் என்றும் பள்ளியை முற்றுகையிட்டு கோபமாக கூறினார்கள். மேலும் தனியார் பள்ளி கழிவறை கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்ததை போன்று இப்பள்ளியிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து இந்த பாழடைந்த கட்டிடத்தை அகற்றி தர வேண்டும் என்றும் பெற்றோர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.