அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

Photo of author

By Sakthi

 

அறுந்து விழந்து கிடந்த கம்பி… இழுத்து கட்ட முயன்றதில் மின்சாரம் தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு…

 

தர்மபுரி மாவட்டத்தில் அறுந்து கீழே விழுந்து கிடந்த கம்பியை மீண்டும் கட்டுவதற்கு எடுத்த பொழுது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் பகுதியில் ஓடச்சக்கரை கிராமம் உள்ளது. இந்த ஓடச்சக்கரை கிராமத்தில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்திற்கும் வீட்டுக்கும் இடையே இருந்த இடைவெளியில் மாது அவர்கள் ஒரு கம்பியை கட்டி அதில் துணிகளை காயவைத்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த வியாழக் கிழமை அதாவது கடந்த 10ம் தேதி அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அன்று பெய்த மழையில் கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. இதை கண்ட மாது அவர்களின் மனைவி மாதம்மாள் கம்பியை மீண்டும் மின் கம்பத்தில் கட்டுவதற்காக கையில் எடுத்த பொழுது மின்சாரம் தாக்கி மாதம்மாள் அவர்கள் கீழே விழுந்தார்.

 

மாதம்மாள் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பற்ற வந்த மாதம்மாள் அவர்களின் மகன் மற்றும் உறவினர் சரோஜா இருவரும் அருகில் வந்தனர். மாதம்மாள் அவர்களை காப்பாற்ற முயன்ற பொழுது மகன் பெருமாள் மற்றும் உறவினர் சரோஜா ஆகிய இருவர்களின் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மாதம்மாள், மகன் பெருமாள், உறவினர் சரோஜா மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

கம்பத்தில் பொருத்தப்பட்ட மின்விளக்கில் இருந்து மின்சாரம் கசிந்து இந்த மின் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அறுந்து விழுந்த துணி காயவைக்கும் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் காரிமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.