தனது கிரிக்கெட் வாழ்க்கை வீணாக இவர் தான் காரணமா? பல வருட கேள்விக்கு பதிலளித்த இர்பான் பதான்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்த பிறகு அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை வீணாவதற்கு காரணமான நபர் குறித்த பல வருட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி–20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு பங்காற்றியவர்களில் முக்கியமானவர் ஒருவர் தான் இர்பான் பதான். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு மற்றும் ஆல் ரவுண்டரான இர்பான் பதான் இந்திய அணிக்காக விளையாடிய மூன்று வித போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 301 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் டில்லி போன்ற அணிகளுக்காக விளையாடிய இர்பான் பதான் சமீபத்தில் தான் சர்வதேச கிரிக்கெட்ட போட்டிகளில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் கடந்த காலங்களில் இந்திய அணிக்காக விளையாடிய போது, இவருக்கும் அப்போதைய பயிற்சியாளராக இருந்த கிரேக் சாப்பலுக்கும் இடையே சர்ச்சை நிலவி வந்தது என்று பரவலாக பேசப்பட்டது.
அதாவது இவரை பேட்டிங் செய்ய வற்புறுத்திய காரணத்தினால் இவரது பந்துவீச்சின் வேகம், ஸ்விங் மற்றும் துல்லியம் ஆகியவை குறைந்துவிட்டதாக அப்போது விமர்சங்கள் எழுந்தன .
இதுபோன்ற விமர்சனம் குறித்து இதில் சம்பந்தப்பட்டவரான இர்பான் பதான் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது,
கடைசியாக நான் 2012 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச போட்டியில் விளையாடினேன். இதற்கு பிறகு என்னுடைய பந்தை ஸ்விங் செய்யும் திறன் குறைந்து விட்டதாக விமர்சனம் எழுப்பப்பட்டது. மேலும் நான் கவனத்துடன் செயல்படுவது இல்லை என்றும் சிலர் புகார் தெரிவித்தனர். போட்டியின் 10 ஓவரிலும் ஒரே மாதிரியாக ஸ்விங் செய்ய முடியாது. இதை விமர்சனம் செய்யும் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய அந்த காலகட்டத்திலும் வழக்கம் போல சிறப்பாகவே பவுலிங் செய்தேன். தவிர என்னுடைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தான் எனது வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அப்போது எனக்கு எதிராக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையில் எவ்வித உண்மையும் இல்லை. 2008 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி தேடித் தந்த போதும் இந்தியஅணியிலிருந்து புறக்கணிப்பட்டேன். அப்போது எந்த வித காரணமும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டது எனக்கு வருத்தமாக இருந்தது.
2010 ஆம் ஆண்டில் எனக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இதற்காக சிகிச்சை எடுத்தேன். ஆனால், அந்த வலிக்கான காரணத்தை துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அந்த காலகட்டத்தில் நடந்த ரஞ்சி கோப்பையில் விளையாடினேன். இதனால் தான் எனது பந்து வீச்சின் வேகம் குறைந்தது. டெஸ்ட் போட்டிக்கும் திரும்ப முடியாமல் போனது என்று அவர் தெரிவித்துள்ளார்.