விபத்தில் கை துண்டிக்கப்பட்ட பெண்! 1 மணி நேரத்தில் பட்டுகோட்டை – திருச்சி! தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவருக்கு குவியும் பாராட்டு
விபத்தில் பெண்ணின் கை துண்டிக்கப்பட்ட நிலையில்- படுகாயம் அடைந்த பெண் மற்றும் துண்டிக்கப்பட்ட பெண்ணின் கை ஆகியவற்றை பட்டுக்கோட்டையில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள திருச்சி மருத்துவமனைக்கு 1 மணி நேரம் 5 நிமிடத்தில் கொண்டு சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் பெண் ஒருவரின் கை துண்டான நிலையில், தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அவரை ஒரு மணி நேரம் 5 நிமிடத்தில் திருச்சி அழைத்துச் சென்றுள்ளார். பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்வதற்கு குறைந்தது சுமார் 2 மணி நேரமாவது ஆகக் கூடும் என்ற நிலையில், மிகத் துணிச்சலாகவும் சாதுர்யமாகவும் ஆம்புலன்ஸை இயக்கி குறைந்த நேரத்தில் கொண்டு சேர்த்துள்ளார் ஓட்டுநர் ராசிக். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உலையகுன்னம் கிராமத்திலிருந்து பத்துக்கு மேற்பட்டோர் டாட்டா ஏஸ் வாகனம் மூலம் புலவஞ்சி கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று சென்றனர். அப்போது பழைய மதுக்கூர் அருகே சென்ற பொழுது திடீரென எதிரே வந்த மற்றொரு டாட்டா ஏஸ் வாகனம் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் உலயக்குன்னம் கிராமத்திலிருந்து வந்த ஆறு பேர் காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இந்திராணி என்ற பெண்ணுக்கு ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவர்கள் உடனடியாக காயம் அடைந்த அந்தப் பெண்ணையும் துண்டிக்கப்பட்ட கையையும் இரண்டு மணி நேரத்துக்குள் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தால் இந்தப் பெண்ணை காப்பாற்றி விடலாம் என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து நிலைமையை உணர்ந்த மதுக்கூர் தமுமுக அமைப்பின் ஆம்புலன்ஸ் டிரைவர் ராசிக் அகமது காயமடைந்த பெண் மற்றும் ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட கை ஆகியவற்றை ஆம்புலன்ஸில் ஏற்றி செவிலியர்கள் உதவியுடன் பட்டுக்கோட்டையில் இருந்து 100 கிலோமீட்டர் தூரம் உள்ள திருச்சி கொண்டு சேர்த்துள்ளார்.
இரண்டரை மணி நேரத்திற்குள் கொண்டு சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் ராசிக் அகமது ஒரு மணி நேரம் ஐந்து நிமிடத்தில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்தப் பெண்ணை கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதரணமாக பட்டுகோட்டையிலிருந்து திருச்சி செல்ல இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்ற போதிலும் டிரைவரின் துணிச்சலான செயலால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே அங்கு கொண்டு சேர்த்துள்ளார். இந்த செயல் மருத்துவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு தனது உயிரை பணயம் வைத்து ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்று ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.