இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மக்கள் அவதி!! இனி ஓமலூரிலும் நடமாடும் கழிப்பிடம்!!
ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடமாடும் கழிப்பறை அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இரண்டு இடங்களில் நிரந்தர கழிப்பிடம் கட்ட உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கினர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி மன்றத்தின் மாதாத்திர இயல்பு கூட்டம் நடைபெற்றது. தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு செயல் அலுவலர் கதிர்வேல், துணை தலைவர் புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ஓமலூர் பேருந்து நிலையம் நவீன முறையில் கட்டுவதற்கான நிதியை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து ஓமலூர் பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டியே காவல் நிலையம், ஒன்றிய அலுவலகம், வணிக வளாகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளது. அதனால், அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இயற்கை உபாதைகளை கழிக்க வசதியின்றி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், ஓமலூர் பேரூராட்சியை மையப்படுத்தி நடமாடும் கழிப்பிடம் அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதில், பேசிய உறுப்பினர்கள், நடமாடும் கழிப்பிடத்திற்கு பதிலாக நிரந்தர கழிப்பிடமே கட்டலாம். அதற்கான இடங்களை அந்தந்த துறைகளிடம் கேட்டு பார்த்து, அவர்கள் இடம் கொடுத்தால் இரண்டு இடங்களில் கழிப்பிடம் கட்டி, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பராமரிப்பு செய்து கொள்ளலாம் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொள்ளுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், தேசிய மகளிரியல் ஆணையம், தமிழ்நாடு நகரியல் மேலாண்மை பயிற்சி நிறுவனம் நடத்திய பயிற்சியில் ஓமலூர் பேரூராட்சி தலைவர் கலந்துகொண்டார்.
அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு, நகரின் தூய்மை குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஓமலூர் பேரூராட்சியில் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.