மக்களே உஷார்! இங்கு புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உலக நாடுகளுக்கும் பரவியது. அதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.போக்குவரத்து மூலம் கொரோனா தொற்று பரவி வரும் நிலை இருந்தால் விமானம் ,ரயில் சேவை என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சீனா, வடகொரியா, ஜப்பான் போன்ற உலக நாடுகளில் உருமாறிய கொரோனா பிஎப்7 வைரஸ் மீண்டும் எழுச்சி பெற தொடங்கி உள்ளது.
அதனால் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் பலபடுத்தபட்டுள்ளது.மேலும் முககவசம், கிருமி நாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றவேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகின்றனர். சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதினால் அங்கிருந்து ஒரு சிலர் வெளியேற தொடங்கி உள்ளனர்.
அந்தவகையில் சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த விருதுநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அவருடைய ஐந்து வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இரண்டு பேரையும் 15 நாட்கள் தனிமை படுத்தி சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் கடந்த வாரம் சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் குடும்பத்துடன் சீனாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அவரை மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று டெல்லியில் புதிதாக நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பத்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இவர்களின் சளி மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.