திடீரென சாகும் மக்கள் உயர்ந்து வரும் வெப்பம் காரணமா? மருத்துவர்களின் பதில்!!
உத்தர பிரதேசத்தில் 72 மணி நேரத்தில் 54 பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெயில் அனைவரையும் வாட்டி வருகிறது. மக்களால் வெளியில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் துவங்கிய இந்த வெயில் இன்னுமே வட இந்தியாவில் முடிவுக்கு வரவில்லை. அங்கு உள்ள பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது.
இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 54 பேர் உயிரிழந்த நிலையில், 400 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
ஜூன் 15 அன்று 23 பேர், ஜூன் 16 ஆம் தேதியில் 20 பேர், ஜூன் 17 இல் 11 பேர் என ஒட்டுமொத்தமாக 54 பேர் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு காரணம் அதிகமான வெப்பம் தான் என்று முதலில் அரசு மருத்துவர்கள் கூறி வந்தனர். இது சம்மந்தமாக அங்கே உள்ள மூத்த மருத்துவர் ஏகே சிங் கூறியதாவது,
இது வெப்பம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு போல் தெரியவில்லை என்றும், ஏனென்றால் அருகே உள்ள மாவட்டங்களிலும் வெயில் அதிகமாகவே உள்ளது ஆனாலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று கூறி உள்ளார்.
மேலும் இறந்தவர்கள் அனைவருக்கும் அறிகுறி முதலில் நெஞ்சு வலியாகவே இருந்தது வெப்ப அலை அறிகுறி எதுவும் இல்லை என்றும் கூறி உள்ளார்.
இந்த உயிரிழப்பு சம்பவம் வேறு காரணத்தால் கூட வந்திருக்கலாம் என்றும், அப்பகுதியில் உள்ள தண்ணீரை காலநிலை துறை ஆராய்ந்து பார்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச சுகாதார அமைச்சர் பிரதேஷ் பதக் கூறியதாவது, இதை பற்றி உபி அரசு பார்வையிட்டு வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையை பல பேர் சூழ்ந்து நிற்பதால், நோயாளிகள் அட்மிட் ஆவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் போதுமான வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே இதுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.