வீட்டு வாடகை கொடுக்க பணமில்லை! வறுமையால் தற்கொலை செய்துகொண்ட 2 நபர்கள் விழுப்புரத்தில் சோகம்!

Photo of author

By Sakthi

விழுப்புரம் வில்லியம் லே அவுட் 2-வது தெருவை சேர்ந்தவர் சுசீந்திரன் இவருக்கு திருமணமாகவில்லை இவருடைய தங்கை பிரமீளா இவரது கணவரான கமல் நடிகை ஊர்வசியின் தம்பி என்று சொல்லப்படுகிறது.

கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதன் காரணமாக, வாடகை வீட்டில் சுசீந்திரனும், பிரமிளாவும், வசித்து வந்தார்கள். போதிய வருமானமில்லாதபடியால் அவர்கள் வறுமையிலிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுசீந்திரன் வீட்டிலிருந்து நேற்று காலையில் ஒரு நாற்றம் அடித்தது இதன்காரணமாக, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்து பொதுமக்கள் விழுப்புரம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து துணை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன், ஆய்வாளர் ரவிச்சந்திரன், மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தார்கள். ஆனாலும் வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் காவல்துறையினர் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்கள்.

அங்கே தனித்தனி அறைகளில் சுசீந்திரனும், பிரமிளாவும், தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்கள். இருவரது உடல்களும் அழுகிய நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 5 நாட்களுக்கு முன்பு இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்பட்டதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்தார்கள் அப்போது வீட்டில் அவர்களிருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் காவல்துறையிடம் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது.

அந்த கடிதத்தில் வறுமை மற்றும் உடல்நிலை சரியில்லாததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்கள்.

மேலும் அந்த கடிதத்தில் வீட்டில் உள்ள பொருட்களை விற்று பணத்தை வீட்டின் உரிமையாளருக்கு வழங்கி விடுங்கள் எங்களுடைய உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து இருவரின் உடலையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

நடிகை ஊர்வசியின் சகோதரியும், நடிகையுமான கல்பனா இவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்து வந்திருக்கிறார். ஆனால் அவர் உயிரிழந்த பின்பு வேறு யாரிடமும் பண உதவி கிடைக்காததால் பிரமிளாவும், சுசீந்திரனும், தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. வறுமையால் அண்ணன், தங்கை, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.