நாளை தொடங்கும் பிளே ஆப் சுற்றுகள்! மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றுடன் லீக் சுற்றுகள் முடிந்தததை அடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி பிளே ஆப் சுற்றுகள் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் அதாவது மே 21ம் தேதியுடன் முடிந்தது. இந்த லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்து குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து நாளை அதாவது மே 23ம் தேதி முதல் குவாலிபையர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. மே 24ம் தேதி நடக்கவுள்ள எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது.
முதல் குவாலிபையர் சுற்றும் எலிமினேட்டர் சுற்றும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ நிறுவனம் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னையில் நடக்கும் லீக் போட்டிகளை காணவரும் ரசிகர்கள் ஐபிஎல் டிக்கெட்டில் இருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து மெட்ரோவில் இலவசமாக பயணித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேர்ந்து இந்த வசதியை வழங்கியது.
இதையடுத்து மே 23, 24ம் தேதிகளில் நடக்கும் பிளே ஆப் சுற்றுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நடத்துவதால் போட்டியை காண வரும் ரசிகர்கள் கட்டாயமாக பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இரவு 11 மணிக்கு மேல் டிக்கெட் கவுண்டர்கள் செயல்படாது என்பதால் மெட்ரோ வாட்ஸ் ஆப் எண் அல்லது மெட்ரோ செயலி மூலமாக பயணச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள பயணிகளுக்கு மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.