தொடங்கியது பிளஸ் ஒன் பொதுத் தேர்வு! சுமார் 12000 பேருக்கு மேல் எக்ஸாம் எழுதவில்லை கல்வித்துறை வெளியிட்ட தகவல்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது. கடந்த 13ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வும் நேற்று 11ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. பிளஸ் ஒன் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே தனித்தேர்வர்கள் உட்பட 12660 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கப்பட்டது. இந்த தேர்வு வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுதுவதற்கு 7 லட்ச்சத்து 88 ஆயிரத்து 64 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 404 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 12660 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை.
மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மொழிப்பாடத்தில் மாணவர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்படவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை கண்காணிக்க கல்வி தகவல் மேலாண்மை முறை மூலம் வருகை பதிவேடுகள் பெறப்பட்டு வருகின்றது.
மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஏதுவாக திருப்புதல் தேர்வுகள் போன்றவை நடத்தப்பட்டன. இருப்பினும் வழக்கம் போல் நடப்பாண்டு அதிகமான மாணவர்கள் பொதுத் தேர்வை எழுத வரவில்லை. மாணவர்கள் ஏன் தேர்வுக்கு வரவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. திங்கட்கிழமை தொடங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வு பதிவு செய்தவர்களில் தனித் தேர்வர்கள் உட்பட 50 ஆயிரத்து 674 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.