இந்த உலகமே கொரோனாவில் இருந்து விட வேண்டுமென காளியிடம் வேண்டிக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி லட்சகணக்கானோரை பலி வாங்கியதுடன் கோடிக்காணக்கானோரை பாதிப்பிற்குள்ளானது. கடந்த ஆண்டு முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு போடப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர். உலக நாடுகள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது.
இந்தியாவிலும் லட்சக்கணக்கானோரை பாதிப்பிற்குள்ளான கொரோனா வைரஸ் பலியும் வாங்கியது. இந்த நிலையில் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், பிற நாடுகளுக்கும் இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு பயணமாக வங்கதேசத்துக்கு சென்றுள்ளார். அங்கு சத்கிரா மாவட்டத்தில் இந்திய – வங்கதேச எல்லைப் பகுதியில் உள்ள ஈஸ்வரிபூர் என்ற கிராமத்தில்மிகப் பழைமையான ஜெசோரேஸ்வரி காளி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி பிரார்த்தனை மேற்கொண்டார்.
இந்நிலையில், காளி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி தரையில் அமர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டார். பின்னர் கையால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி மற்றும் தங்கத்தினால் ஆன மகுடம் ஒன்றையும் காளிக்கு வழங்கினார். “கொரோனா கொள்ளை நோயிடம் இருந்து உலகமே விடுவிக்கப்பட வேண்டுமென வேண்டிக் கொண்டேன்” என்று காளியிடம் வேண்டிக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முன்னதாக காளிக்கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.