திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி

Photo of author

By Anand

திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. நாளடைவில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதாகவும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாமக திமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும் வதந்திகள் வெளியாகி வந்தன

இந்நிலையில் தான் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்று கொண்டார். பாமக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொது மக்களையும் கட்சியினரையும் சந்தித்து வருகிறார். பாமக 2.0 என்ற வியூகத்துடன் தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு ஆர்பாட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இது போன்ற கூட்டங்களில் பேசும் அவர் அடுத்த தேர்தலில் பாமக கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.ஆனால் பாமக தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் இருப்பது கூட்டணிக்கான அறிகுறியாகவே பலராலும் பேசப்பட்டது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவின் வியூகமாக கருதப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கூட கருத்து தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக தம்பி ஸ்டாலின் பார்த்துக் கொள்வார் என மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் பலரும் பேசி வருவது போல திமுகவுடன் பாமக கூட்டணி அமைத்தால் ஏற்கனவே உள்ள விசிக கூட்டணியில் இருக்குமா அல்லது வெளியேறுமா என்பது குறித்தும் விவாதம் எழுந்தது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் பாமக மற்றும் விசிக ஒரே கூட்டணியில் இருக்க முடியுமா என்றெல்லாம் இதில் விவாதிக்கப்பட்டது.

அதே போல பாமக உள்ள கூட்டணியில் விசிக இருக்காது என பல்வேறு இடங்களில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாமக தரப்பிலோ அந்த மாதிரி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவை சமாளிக்க அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

நேற்று தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்த அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டிலேயே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். அந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் வன்னியர் மற்றும் தலித் சமூகத்தினர் 40 விழுக்காடு உள்ளனர். இரண்டு சமூகமும் பின் தங்கியுள்ளது. இரண்டு சமூகமும் முன்னேறினால் தான் தமிழ்நாடு முன்னேறும். வன்னியர் தனி இட ஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது, சீர் மரபினர் உட்பட யாருக்கும் இந்த இட ஒதுக்கீடு எதிரானது கிடையாது என்று தெரிவித்தார்.

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பேசும் போது தலித் மக்களின் நிலை குறித்தும் பேசியது இரு தரப்புக்கும் மீண்டும் ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தும் முயற்சியாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தாலும் விசிகவுடன் இணக்கமாக இணைந்து செயல்படுவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் இதை எதிர்தரப்பில் உள்ள விசிக ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்தும் விவாதம் எழுந்துள்ளது.