குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த திருச்சி பாலக்கரை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்ஃபோன்ஸ்ஸை போலீஸார்கைதுசெய்தனர். இந்நிலையில் குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக போக்சோ சட்டம் கூறுவது என்ன என்பதை தற்போது காணலாம்
2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ’ சட்டத்தின்படி குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி முதல்முறையாக குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
குழந்தைகள் ஆபாச படத்தை வலைதளங்கள் மூலமாக பகிரும் நபர்களுக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது.
குழந்தைகளை வைத்து படம் நேரடியாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து சேர்த்திருந்தாலும் கூட, அது சட்ட விரோதம் என்றே கூறப்படுகிறது.