காவலர்கள் தபால் முறையில் வாக்குப்பதிவு! ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அப்டேட்ஸ்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை இன்று செலுத்தினர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே வேட்புமனதாக்கல் முடிந்து விட்டது. வாபஸ் நிராகரிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்து 77 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளரும், மறைந்த திருமகனின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ் தரப்பு மற்றும் அமாமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலைமையில் அதிமுகவின் ஓட்டுகள் முழுவதும் தென்னரசுவுக்கே சேரும். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகாவும், தேமுதிக சார்பில் சிவபிரசாந்தும் களத்தில் உள்ளனர்.
77 வேட்பாளர்களும் தங்கள் பிரச்சாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 58 காவலர்கள் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.