முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக கட்சியினரும், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தற்போது சென்னையில் உள்ள பசுமைவழி சாலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு, திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்று தங்களின் வருத்தங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து தற்போது மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அவர்களும், தேமுதிக கட்சியின் சார்பில் எல்.கே.சுதீஸ் என்பவர் உள்பட அனைவரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதே போல் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக பிரமுகர்கள் எஸ்.வி.சேகர், குஷ்பு உள்ளிட்டோரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். திரையுலகை சேர்ந்த நடிகை ரோஜா, நடிகர்கள் ஜீவா மற்றும் பிரபு, மற்றும் இயக்குனர் டி.ராஜேந்திரன் ஆகியோரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இயக்குனர் டி.ராஜேந்திரன் முதலமைச்சரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறியது என்னவென்றால் – கடந்த 8 மாத காலமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், உள்ளாட்சித்துறை வரிகளை நீக்கி தரும்படி ஏற்கனவே எழுதி அனுப்பியிருந்த கடிதத்தை நினைவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.