கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களின் மீது இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஈவு இரக்கமின்றி அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது. இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தார்கள். அதேபோல உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தார்கள்.
அதோடு தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற அந்த துர்சம்பவத்திற்கு இந்தியாவில் மத்திய அரசாக செயல்பட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி எந்த ஒரு கண்டனத்தையும் அல்லது அதற்கு எதிராக நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது அனைவராலும் கண்டிக்கப்பட்டது.இதற்க்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தார்கள். அதில் முக்கியமான தலைவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் அவர் பல்வேறு சமயங்களில் இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் மற்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தாலும் இந்தியா அதற்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதன் காரணமாக இந்த போர்க்குற்ற விசாரணை தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.
மறுபுறம் அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த திமுகவோ ஏதோ பெயருக்கு ஒரு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துவிட்டு இதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது.இதனால் இந்தியா முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் மத்தியில் திமுகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மிகப்பெரிய அவப்பெயர் உண்டானது. ஆனாலும் அதனை கண்டுகொள்ளாமல் அப்போது இருந்த மத்திய மாநில அரசுகள் தங்களுடைய வேலைகளை மட்டுமே பார்த்து இருந்தார்கள்.
இந்தப் போர் குற்றத்திற்கான விசாரணை நடைபெற்றால் நிச்சயமாக இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் கோரிக்கை வைத்து இருந்தார்கள். ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணை எதிலுமே இந்தியா தமிழர்களுக்கு சாதகமான முடிவை எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.இந்தநிலையில்,, இலங்கையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக ஆறு நாடுகளின் சார்பாக ஐநா சபையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற இருக்கிறது. இந்த வாக்கெடுப்பில் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக வாக்கு அளிக்கும் என்று அந்த நாட்டின் வெளியுறவு செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
அதோடு பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அதிபருடன் தொலைபேசியில் உரையாடி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தமிழர்களாலும் காங்கிரஸ் கட்சி வெறுத்து ஒதுக்கப்பட்டதோ அதையே சம்பவத்தால் தற்சமயம் பாஜகவும் தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் ஒரு சூழ்நிலை உருவாகிவிடும் என்ற கருத்தும் எழுந்திருக்கிறது.
இலங்கை போருக்குப் பின்னர் தமிழர்களால் காங்கிரஸ் கட்சி எழுத்து ஒதுக்கப்பட்டிருக்கிறது ஆனால் தற்சமயம் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டால் மத்தியில் ஆட்சியில் இருந்து வரும் பாஜகவும் தமிழர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் இலங்கை அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடி இருப்பது சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் இந்த சமயத்தில் தமிழர்களுக்கு பாதகமான ஒரு முடிவை மத்திய அரசு எடுத்தால் அது தமிழக தேர்தலில் பாஜகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதேசமயம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுதொடர்பாக மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது இந்த நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான விசாரணையில் அந்த நாட்டிற்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தியா செயல்பட்டால் அது நிச்சயமாக பாஜகவை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.
தமிழர்கள் மீது பாஜகவிற்கு உண்மையான அக்கறை இருந்தால் நிச்சயமாக இந்த தீர்மானத்தில் நடைபெறும் விசாரணையில் தமிழர்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய அரசு உண்மையிலேயே தமிழர்கள் மீது அக்கறை காட்டுகிறதா அல்லது போலியாக நடிக்கிறதா என்பதை இன்றைய விசாரணையில் தெரிந்து கொள்ளலாம் என்பதே சாமானிய மக்களின் கருத்தாக இருக்கிறது.