அடுத்தவர்கள் குழந்தைக்கு இனிஷியல் போடும் திமுக! வெளுத்தெடுத்த பொன்னார்
தமிழகத்தில் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தேர்தல் பிரசாரத்தின்போது மக்களுக்கு கவர்ச்சியான பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது.ஆனால் பதவியேற்றதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு முக்கியமான பல்வேறு வாக்குறுதிகளை கிடப்பில் போட்டு விட்டது.
குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 வழங்குவது,நீட் தேர்வு ரத்து மற்றும் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளில் மக்களை ஏமாற்றி விட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாற்றியுள்ளார்கள்.மக்களை ஏமாற்றாமல் திமுக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமீபத்தில் அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் அடுத்தவர்களின் குழந்தைக்கு திமுக இனிஷியல் போட்டு கொள்வதாக பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாற்றியுள்ளார்.மேலும் திமுகவினர் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்று தகுதி அற்றவர்கள் எனவும்,மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு திமுக அல்வா கொடுக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை எனவும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தான் நீட் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, கொரோனா பாதிப்பிலிருந்து நம்மையும், பிறரையும் காக்க தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை செய்து கொள்வது அவசியமானது. மேலும் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசு விதிக்கும் அனைத்து விதிகளையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.
நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வரவேற்பும் அதே அளவில் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.இந்நிலையில் மத்திய ஒதுக்கீட்டில் வரும் மருத்துவ படிப்புக்கான இடங்களில் இதுவரை வழங்காமலிருந்த பிற்படுத்த மாணவர்களுக்கான 27% இட ஒதுக்கீட்டையும்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலமாக நம் நாட்டின் சரித்திரத்தில் மிக முக்கிய காலக்கட்டத்தை பிரதமர் எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு விஷயமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும். நீட் தேர்வு பின்னணியை பார்த்தால் ஆரம்பத்தில் அது கொண்டு வரப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ் கட்சியும்,மாநிலத்தில் திமுக கட்சியும் ஆட்சி செய்தது.அந்த சமயத்தில் கலைஞரின் ஒரு சுட்டு விரல் அசைவுக்கு மத்திய அரசு தலை வணங்கும் என்று சோனியா சொன்னார்.அப்படியிருக்கையில் அவ்வளவு சக்தி படைத்த நீங்கள், ஏன் இந்த ஓபிசி மாணவர்கள் பற்றி அப்போது கவலைப்படாமல் இருந்தீர்கள்? இன்று நீட் பற்றி பேச திமுகவுக்கும் காங்கிரசுக்கும் எந்தவித அருகதையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு ஆண்டில் மட்டுமே நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையானது 10% அதிகமாகியுள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்படும் கிராம புற மாணவர்கள் நலனுக்காக கடந்த அதிமுக அரசும் 7.5% இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் அடுத்தவர்களின் குழந்தைகளுக்கு தனது இனிசியலை போடும் வேலையை திமுக செய்ய கூடாது.
திமுகவினர் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்று தகுதியற்றவர்கள்.மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அல்வா கொடுக்கிறது. நீட் தேர்வை மத்திய அரசு கொண்டுவரவில்லை. உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி தான் நீட் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் நாடகம் ஆடுவதற்காக திமுக இதை பயன்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.