பூம்பாறை நவபாஷாண முருகன் கோவில்!

0
239

நாட்டிலிருக்கின்ற அனைத்து கோவில்களிலும் ஐம்பொன், வெண்கலம் மற்றும் கற்களாலான சிலைகள் தான் இருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள 2 கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் ஏற்படுத்தப்பட்ட அபூர்வமான சிலைகள் இருக்கின்றன.

அதாவது பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, அதேபோல பூம்பாறை மலையிலிருக்கின்ற குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

கொடைக்கானலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது பூம்பாறை கிராமம் இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கே வர முடியும் என சொல்கிறார்கள்.

உலகிலேயே நவபாஷாண சிலைகளை ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற மாமுனிவராவார். ஆனால் இவர் உருவாக்கிய சிலை பழனி மாலை முருகன் மட்டும் தான் என அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையையும் அவர்தான் நவபாஷாணத்தில் உருவாக்கிக் கொடுத்தவர் என்பதை பலரும் அறியாமலிருக்கிறார்கள். அதே போல பூம்பாறை முருகனும் பழனி முருகனைப் போலவே அருள் தர வல்லவர் என்று சொல்லப்படுகிறது. அந்த கோவிலுக்கு சென்று அனுபவரீதியாக பயனடைந்தவர்களுக்கு தான் இதன் மகத்துவம் புரியும்.

பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது கடைசியாக வந்த வனம் பழனி, கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலை தான் என சொல்லப்படுகிறது.

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும், நடுவிலிருக்கின்ற யானை முட்டி குகையில் அமர்ந்து தான் கற்று வந்த கலையை சோதிக்க அதற்கான மூலிகைகள் உள்ளிட்டவற்றை சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார் என சொல்லப்படுகிறது.

அந்த சிலையை தான் பழனி மலையில் பிரதிஷ்டை செய்தார், தண்டம் கொண்டு அந்த சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர் வந்ததாகவும், சொல்லப்படுகிறது.

அந்தக் கோவிலை இறைவனிடம் வேண்டி சிவபூதங்களால் கோவில் மற்றும் மண்டபங்களை கட்ட செய்தார் என்று வரலாறு தெரிவிக்கிறது.

அதன் பிறகு மீண்டும் சீன நாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மறுபடியும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையையடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்வதற்காகவும், ஆதிபராசக்தியின் துணை கொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலை நிறுத்தவும், பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலமாக நவபாஷாண சிலையை உண்டாக்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சிலையை இங்கிருக்கின்ற திருமண மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்தார் எனவும், தெரிகிறது. அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு முருகனை தரிசிக்க வந்தார். அந்த சமயத்தில் இரவு நேரமானதன் காரணமாக, கோவில் மண்டபத்தில் படுத்து உறங்கிவிட்டார்.

அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொலை செய்ய முயற்சித்த போது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவி உடையணிந்திருந்த அருணகிரி நாதார் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்ததை கண்டு குழந்தையும், தாயும், தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து அருணகிரிநாதரை கொல்லாமல் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.

தன்னுடைய ஞானதிருஷ்டியால் நடந்த சம்பவத்தை உணர்ந்து கொண்ட அருணகிரிநாதர் இத்தல முருகனை குழந்தை வேலர் என்றழைத்தார். அந்தப் பெயரே இத்தல முருகனுக்கு நிலைத்திருக்கிறது.

முருகப்பெருமானின் அருகிலேயே அருணகிரிநாதருக்கும் சிலை இருக்கிறது இங்கே வந்து வழிபடுபவர்களின் பாவ வினைகள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.