தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற இருந்த சூழ்நிலையில், தற்பொழுது சில அரசியல் சிக்கல் காரணமாக ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களிலும் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு கவுன்சிலர் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, வார்டு வரையறை பிரச்சினை, எல்லை தீர்மானம் உள்ளிட்ட காரணமாக ஒன்பது மாவட்டங்களில் தாமதமாக அதாவது 21 மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தப்பட்டது. 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிலையில், மற்ற ஒன்பது மாவட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 27 மாவட்டங்களிலும் வெற்றி பெற்ற பதவியேற்ற அனைவருக்கும் பதவிக்காலமும் வருகிற ஜனவரி 5ஆம் தேதி முதல் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் தற்பொழுது அதிகாரிகள் மட்டத்தில் இதுகுறித்து பேசப்படுவது :-
ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்குவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் தேர்தல் நடைபெறுவதே தள்ளிப் போகலாம் அல்லது நடத்தப்படாமலேயே போகலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கு காரணம், தற்போது சில மாவட்டங்களில் கிராமங்களை நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுடன் இணைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராம மக்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
மாநகராட்சிகளை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் காரணமாகவும், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலால் தேவையில்லாமல் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் இடையே மனக்கசப்பு ஏற்படும் என்ற காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக 2026க்கு பிறகு நடத்தலாம் என திமுக தலைமை ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.