கர்ப்பிணி பெண் மரணம்!! புதுக்கோட்டையில் பரபரப்பு!!
புதுக்கோட்டையில் கர்ப்பிணி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள மேட்டுக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கமணி – விஜயா தம்பதியினர். இவர்களின் மகன் அரவிந்தன் என்பவராவார். அரவிந்தனுக்கும் நாகேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. தற்போது நாகேஸ்வரி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நாகேஸ்வரியின் பெற்றோர் திருமணத்தின்போதே அவருக்கு 15 சவரன் நகைகள் போட்டு திருமணம் செய்துள்ளனர். ஆனாலும் நாகேஸ்வரியின் கணவர், மாமனார், மாமியார் மற்றும் கணவரின் மாமா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர். இதை தாங்க முடியாத நாகேஸ்வரி நேற்று விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது கணவர் அரவிந்தன், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பிறகு இந்த தகவலை நாகேஸ்வரியின் உறவினர்களுக்கு தெரிவித்து விட்டு, அரவிந்தனின் குடும்பத்தார் தலைமறைவாகி விட்டார்கள் என தெரிகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட நாகேஸ்வரியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஆனால் அங்கு நாகேஸ்வரி இறந்து விட்டதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நாகேஸ்வரியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இதை சந்தேக மரணம் என வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நாகேஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவருடைய கணவர், மாமனார், மாமியார் மற்றும் கணவரின் மாமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் நாகேஸ்வரியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் கைது செய்வோம் என உறுதி அளித்த பிறகே நாகேஸ்வரியின் உறவினர்கள் அவரது சடலத்தையும், குழந்தையின் சடலத்தையும் பெற்று சென்றனர். இச்சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.