இந்தியா இந்துக்களின் நாடு அதில் எந்த சந்தேகமும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சைக் கருத்து!
சி ஏ ஏ சட்டம் குறித்துப் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலாதா விஜயகாந்த் இந்தியா இந்துக்களின் நாடு என பேசியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஜனவரி 12 ஆம் தேதி சென்னை கொரட்டூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நீண்ட நாட்களுக்குப் பின் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சில் ’தொண்டர்களே எனது முதல் கடவுள். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் பூரண நலம்பெற்ற்ய் வருவேன்’ என்றும் கூறியது அக்கட்சியினருக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
விஜயகாந்துக்குப் பின் பேசிய அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் சில சர்ச்சையானக் கருத்துகளைப் பேசியுள்ளார். அவரது பேச்சில் ’தலைவர் விஜயகாந்துக்கு எல்லா மதத்தினரும் ஒன்றுதான். உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது யானைப் பசிக்கு சோளப்பொறி போலதான். இனிமேல் நம் ஆட்டம் தொடங்க உள்ளது. அடுத்து நடக்கும் தேர்தலில் நமக்கு அதிக இடம் கிடைக்கும். சி ஏ ஏ சட்டத்துக்கு எதிராக குரல்கள் எழுந்ததைப் போல அச்சட்டத்துக்கு ஆதரவும் உள்ளது.
இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்துக்களோடு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இங்கு சகோதரத்துவத்துடன் பழகி வருகிறார்கள். நமது நாட்டில் பிரிவினை இல்லை.
ஆனால் மதத் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை.’ எனப் பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்புப் படி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பது குறிப்பிடத்தகக்து.