பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை…
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு வந்தது. மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் மழைகால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தின் மற்ற நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்தி வைத்து மணிப்பூர் மாநில பிரச்சனை தொடர்பாக விரிவாக விவாதம் செய்ய வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் முக்கிய கோரிக்கை ஆகும்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவர்களை பேச வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நாளை(ஆகஸ்ட்10) வரை நடைபெறவுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை (ஆகஸ்ட்10) பதில் அளிக்கவுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும் மசோதாக்கள் குறித்தும் விவாதம் செய்யபாபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆலோசனையில் முக்கிய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.