பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்!! யார் யார் பயன்பெறலாம்?

Photo of author

By Vinoth

இந்தத் திட்டத்தில் ‘பிரதமர் விஸ்கர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டையுடன் முதல் தவணையாக ஒரு லட்ச ரூபாய் வரை வட்டியில்லாக் கடனும், இரண்டாம் தவணையாக 2 லட்சம் ரூபாய் கடனும் வழங்கப்படுகிறது. இதற்காக வங்கிக்குச் செலுத்த வேண்டிய வட்டியான 13 சதவீதத்தில் 8 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. மீதம் 5 சதவீத வட்டியை மட்டும் கடன் பெறுவோர் செலுத்தினால் போதும். அடிப்படைப் பயிற்சி, மேம்பட்ட பயிற்சி என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி தரப்படுகிறது. இதில், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர்– காலணி தொழிலாளா்– காலணி செய்பவர், கொத்தனார், கூடை/ பாய்/ துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலை கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் என 18 விதமான தொழில்களைச் செய்வோர் பயன் பெறலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டும் செயல்படுத்தவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த செப்டம்பரில் கோவையில் நடந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் குற்றம் சாட்டியிருந்தார். இதுவரை 2 கோடியே 60 லட்சத்து 18 ஆயிரத்து 676 பேர், விஸ்வகர்மா திட்டத்தில் பயன் பெற விண்ணப்பித்ததில், 25 லட்சத்து 4,250 பேர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.