தனியார் வங்கி கொள்ளை: பிடிப்பட்ட கொள்ளையர்கள்! மீட்கப்படுமா 32 கிலோ தங்கம்!
சென்னையில் தனியார் வங்கியில் 32 கிலோ தங்கம் மற்றும் பணம் பட்டப் பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியது குறிப்பிடத்தக்கது. சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று பட்ட பகலில் இரு சக்கர வாகனத்தில் வந்த கும்பல் காவலாளிக்கு மயக்கம் மருந்தை கொடுத்தது,அங்குள்ள ஊழியர்களை கழிப்பறைக்குள் அடைத்து வைத்து அங்குள்ள நகை மற்றும் பணங்களை திருடி சென்றனர்.
கொள்ளையடித்த தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விட்டனர். உடனடியாக டிஜிபி கொள்ளையர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பேட்டியளித்தார். அதேசமயம் இக்கொள்ளையில் யார் ஈடுபட்டு உள்ளார்கள் என்பதையும் விசாரணை செய்து வந்தார்கள். இப்படி விசாரணை செய்கையில், முன்னதாக இதே வங்கியில் வேலை பார்த்த முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் திட்டம் போட்டு தான் இவருடைய சக நண்பர்களை அழைத்து 32 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எடுத்துக் கொண்டு ஆறு தனிப்படையை அமைத்து இந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தற்பொழுது திருட்டுப்போன 32 கிலோ தங்கத்தில் பாதி தங்கத்தை மீட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவோ போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.