தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்கலாமா? அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட புதிய அறிவிப்பு

Photo of author

By Anand

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்கலாமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரசின் பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தள்ளி வைக்கபட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதனால் பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும் மாணவர்களுக்கிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்பதால் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை காலையிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது.

மேலும், இதற்காக பாடத்திட்டங்களின் அளவை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை எடுக்கக் கூடாது என்றும், மீறி ஆன்லைன் வகுப்புகளை எடுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். அமைச்சரின் இந்த திடீர் அறிவிப்பால் தனியார் பள்ளிகள் கடும் அதிர்ச்சியடைந்தன.

இந்நிலையில், அரசின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரி தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க தடையில்லை என்று அறிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஜூன் 1 ஆம் தேதி முதல் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.