தமிழக சட்டசபை கூட்டத்தில் ரேஷன் கார்டுகள் குறித்த கேள்விகளுக்கும் ரேஷன் கடைகள் குறித்த கேள்விகளுக்கும் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பதிலளித்திருக்கிறார்.
அதன்படி, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு 18,09,607 எண்ணிக்கையிலான புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மேலும் புதிதாக விண்ணப்பித்திருக்கக்கூடிய 1,67,795 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவிக்கிறார்.
தமிழகத்தில் இதுவரை 2,29,00,000 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களுக்கு ரேஷன் கடைகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் புகார் அளிப்பதற்காக முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகளில் புகார் பதிவு பெட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், புகார் பதிவு பெட்டிகள் மூலம் தங்களுடைய புகார்களை தெரிவிக்க முடியவில்லை என்றால் பொதுமக்களுக்காக இலவச தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு தரப்பில் கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதன்படி, பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கடைகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் 1967 அல்லது 1800-425-5901 என்ற அழைப்பிற்கு அழைப்பு புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் துவங்கி இருப்பதால் வீடு தேடியே ரேஷன் பொருட்களை வழங்குவதற்கான முடிவுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், இதற்கான ஆய்வுகள் தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அங்கு அவை வெற்றிகரமாகும் பட்சத்தில் தமிழகத்திலும் அதே பின்பற்றப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வெயில் காலங்களில் ரேஷன் அட்டைதாரர்களை அலைய விடாமல் இருப்பதற்காக ஒரே தவணையில் ரேஷன் அரிசி பருப்பு, கோதுமை எண்ணெய் சக்கரை உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும் என்றும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.