நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்துவதாக கூறி கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய நபர்களுக்கு கல்லூரி மாணவிகளை அனுப்புவதற்காக பேரம் பேசியபோது நிர்மலா தேவி ஆதாரத்துடன் சிக்கினார்.
அவரை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜர் பல்கைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர்கள் மூவரையும் மட்டும் குற்றவாளிகளாக கூறி முடித்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இழுத்தடித்து வரும் இந்த வழக்கு தொடர்பாக சில மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதனையடுத்து கடந்த 1ஆம் தேதி இறுதிகட்ட வாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தீர்ப்பு என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் எதிர்பாராத விதமாக தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, ஸ்ரீவில்லிப்புத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். பேராசிரியை நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் தீர்ப்பை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறம் um நேற்று மாலை முதல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை.